புதன், 11 அக்டோபர், 2023

காட்சிப் பிழை..!

 காண்பதெல்லாம் காட்சிப் பிழை ஆனது..

கிறுக்கல்கள் எல்லாம் கவிதை ஆனது..

விக்கல் கூட இங்கு விமர்சனம் ஆனது..

அடிக்கடி முகம் மாற்றும் நண்பர்களைக் கண்டு

கனிணி கூட கவலைப் பட்டது..!

தனியாக சிரித்த அவர்களைப் பார்த்து

"smilies" கூட இரக்கப் பட்டது...

முகத்தை மாற்றி முகவரியை மாற்றி

ஆண் பெண்ணாய், பெண் ஆணாய்..

அவதாரம் எடுக்கும் அற்புதம் நடக்குது...!

நண்பா.... 

முக நூலில் முகத்தைக் காட்டி

அக வாழ்வில் முகத்தை இழக்காதே...!

திங்கள், 7 செப்டம்பர், 2015



சோரம் போன
துப்பாக்கி
வீரம் பேசுகிறது...
அவனின்கண்ணீர்
திராவகமாய் மாறி
நாளை
இராணுவத்தின்
முகம் அழிக்கும்...

(அமெரிக்க இராணுவம் வியட்நாமில்
அப்பாவி மக்களைகொன்று குவித்த போது எடுக்கப் பட்ட படங்களில்இதுவும் ஒன்று.- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)

வியாழன், 10 ஜூலை, 2014

பதினெண் கீழ்கணக்கு..!


ஊடல் முற்றி ஓர் நாள் என்னவள்
காடு தாண்டி அவளின் கூடலூருக்கு சென்றுவிட்டாள்..!
அன்பின் ஆரணங்கவளை அழைக்க
ஆரண்யம் தாண்டி சென்றேன்..
நடைவழி பயணத்தில்
நாலடியார் அங்கு வந்தார்..!
நாட்டு நடப்பை பேசிக் கொண்டே
நான்மணிக் கடிகைப் பாதையில்
இன்னா நாற்பதை சொல்லிக் கொண்டே
அவளின் இனியவை நாற்பதை எண்ணிக் கொண்டே
களவழி நாற்பதைக் கடந்த போது
காற்வழி நாற்பது கை நீட்டி அழைத்த்து..!
ஐந்திணை ஐம்பதும்
திணைமொழி ஐம்பதும்
ஐந்திணை எழுபதோடு ஆர்ப்பரித்து நின்றது
திணைமலை நாற்பதும் திசை காட்டி நின்றது..!
அங்கே திருக்குறள் தென்றல் வீசும்
திரிகடுகச்சாரலில்-என்
ஆசாரக் கோவையவள்
அழகெழிலாய் நின்றாள்..!
என் பாரி அவளுக்கு
பழமொழி நானூறும் சொல்லி
சிறுபஞ்சமூலம்.. கரம் பிடித்து
முதுமொழிக்காஞ்சிக்கு
அழைத்து வந்தேன்...
அவளில்லா என் வாழ்வு
வலக்கை இழந்த நிலை
வருத்தமாய் உணர்த்திட்டேன்..
ஏலாதிப் பட்டினத்தில்
அவளுடன் ஏகாந்தம் தினம் துய்த்து
கைந்நிலை உணர்த்திட்டேன்..
பதினெண்கீழ்கணக்கு நூலணைத்தும்
பகிர்ந்து கொண்டே..
பால் நிலவு எழிலவள்
ஊடல் களைந்தாள்..
கூடல் மொழி பொழிந்தாள்..!

திங்கள், 7 ஜூலை, 2014

பத்துபாட்டு..!


முத்தமிழின் ரெத்தினமே
வைரமணி சித்திரமே
மூவேந்தர் வளர்த்த
செந்தமிழின் சிறு நகையே..

நீ
திருமுருகாற்றுப்படை நடத்தி
பெருநாற்றுப் படை எடுத்து
சிறுபாணாற்றுப் படை கடந்து
பெரும்பாணாற்றுப் படை வென்று
முல்லைப் பாட்டு பாடி
மதுரைக் காஞ்சிக்கு வா..

நெடுநல் வாடையில் நெகிழ்ந்து
குறிஞ்சிப்பாட்டில் முகிழ்ந்து
பட்டினப்பாலையில் மகிழ்ந்து
மலைபடுகடாமில் மனமேந்தி.....

பத்துமாதம் சுமந்த உன் தாய்......
பத்துப் பாட்டோடு விழித்திருக்கிறேன்
விரைந்து வாடா... என் வீரத்திரு மகனே..!

தேன் சிட்டு..




அலகூட்டும் 
அழகுச்சிட்டு
அதரம் தொட்டு
அமுதூட்டும்
தேன் சிட்டு..

கூடு விட்டு
மரமமர்ந்து
கொஞ்சுகிற
பஞ்சு சிட்டு..

வெண்பட்டு
மேனிசிலிர்க்க
விழி காட்டும்
வழி சென்று
களிப்பூட்டும்
கவிச்சிட்டு..

செல்லமாய்
மெல்லமாய்
சிநேகிதமாய்
காதலின்
கரு சொல்லும்
சின்ன தேன் சிட்டுக்கள்...!

போர்க்களத்தில் பூவொன்று..!



இடைவிடாத 

குண்டு மழைகளுக்கிடையில் 
எனை அழைத்தாய்..

அச்சம் தவிர்த்து
ஆறுதல் தேடினாய்
நெஞ்சில் இடம் தந்து
நேச மழை பொழிந்தேன்..

என் ஆண்மை வாசத்தில்
அடைக்கலமானாய்...!

விழிநீரைத் துடைத்துவிட்டு
மொழியில்லா மெளனம் காத்தாய்..

தொட்டு தொட்டு உனை ரசித்து விட்டு
விட்டு விட்டுப் போக மனதில்லை..

எல்லை கடந்து போகிறேன்..
ஆதலின் உன்னிடம் எல்லை மீறாமல் போகிறேன்..

புரட்சி விடியலில்
பூபாளம் இசைக்க
நெடும்பயணம் செல்கின்றேன்..

காதல் அழைக்கிறது
கடமை தடுக்கிறது...
காத்திரு என்
பாசச் சுடர் மதியே...

துப்பாக்கி ஓசை அடங்கி
நமக்கென்றொரு
நாடு மலரும்
நாள் வரை காத்திரு
என் காந்த மலரழகே..!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!


குறுந்தொகையாய் நீ வந்தாய்.. 
நற்றினையாய் நானானேன்...
பதிற்றுப்பத்தில் கரம் பிடித்தோம்..
ஐங்குறு நூறாய் 
பரிபாடல் பாடினாய்...
கலித்தொகையாய் 
வியந்து நின்றேன்..!
அக நானூறு படைத்த நாம்
புற நானூறும் படைத்து
எட்டுத்தொகை இலக்கியம் வெல்வோம் வா..!!